திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றாக, மதுரை புற நகர் சாலையை ஓட்டிய பஞ்சபூரில் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் 115.68 ஏக்கர் பரப்பளவில் ரூ.408.36 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சில முடிவடையாத பணிகள் காரணமாக சூலை 16 அன்று பொதுமக்களின் முழு பயன்பாட்டுக்கு வந்தது. பேருந்துகள் இயக்கத்தினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சூலை 16 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேருந்து நிலைய வரவேற்பில், பேருந்து முனைய மாதிரி வடிவமைப்பு சிறப்பாக அமைக்கப்பட்டும் பேருந்து முனைய ஆரம்ப முதல் இறுதிவரையிலான கட்டுமான புகைப்படங்களும் நம்மை பிரமிப்போடு வரவேற்கிறது.
பேருந்து முனையம் முழுவதும் ஏசி வசதிகள். நாம் பேருந்து நிலையத்தில் தான் இருக்கிறோமா அல்லது மால்களில் நுழந்துவிட்டோமா என்று ஒரு நிமிடம் நம்மை சிந்திக்க வைத்துவிடுகிறது. நவீன சுத்தமான கழிவறைகள், எங்கு காணினும் பெரிய பெரிய டிஜிட்டல் திரைகள் கொண்ட அறிவுப்பு பலகைகள், பயனிகள் பேருந்துக்காக காத்திருக்க ஆங்காகே சிறப்பாக வடிவமைத்த ஓய்வு நாற்காளிகள் அதில் அமர்ந்து கொண்டே பேருந்து பற்றிய அறிவிப்பு தகவல்களை மிகப்பெரிய டிஜிட்டல் திரையில் காணும் வகையில் பொறுத்தி இருக்கிறார்கள்.

பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு பல உணவகங்கள், சிற்றுண்டிகள், தேநீர் கடைகள் திறந்து இருக்கிறார்கள். பேருந்து நடைமேடைகளில் கூட தேநீர் கடைகள் அமைத்து இருப்பது பயணிகளுக்கு சிறந்த வசதியாக உள்ளது.
இது ஒரு டபுள் டக்கர் பேருந்து நிலையம் ஆம் இரு தளங்களை உள்ளடக்கியது. தரைத்தளத்தில் 345 வெளியூர் பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்தும் வசதி உள்ளது. தரை தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு செல்ல படிகள், லிஃப்ட், எஸ்கலேட்டர், என வசதி அமைக்கப்பட்டு உள்ளது சிறப்பு. மேல் தளத்தில் நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாடியில் பேருந்து என்பது புது அனுபவமாக எளிய மக்களுக்கு நிச்சயம் இருக்கும். முதல் தளத்தில் 56 உள்ளூர் நகரப் பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்தும் வசதி கொண்டது.

பேருந்து முனையத்தில் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்காக 3 பேட்டரி வாகனங்கள், அவசரத் தேவைக்காக மருத்துவர் குழுவினர் இயங்கி வருகிறார்கள்.
பேருந்து முனையத்தை சுத்தமாகப் பராமரிக்க 228 துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்புக்கு காவலர்கள் என நியமித்து இருக்கிறது அரசு. மேலும் ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைக்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர், அரியலூர் ஜெயம்கொண்டம் போன்ற ஊர்காளுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போலவே சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
ரூ.17.60 கோடியில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் வரை, தற்போதுள்ள புதிய பேருந்து முனையத்திற்கு அருகிலேயே தற்காலிகமாக காலி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அலைய வேண்டாம் வெளியூர் செல்ல நேரடியாக பஞ்சப்பூரில் இயங்கும் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் செல்வது நல்லது.

