தமிழன், தமிழர்களாக ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் மற்ற இனங்கள் முனைப்பு காட்டுகிறதோ இல்லையோ தெரியவில்லை, ஆனால் தமிழர்கள் அதில் தீவிர முனைப்போடு இருக்கிறார்கள்.
தற்போதைய சூழலில் திருநெல்வேலியில் கடும் தீண்டாமை இருப்பதாகவே கடந்தகால செய்திகள் உணர்த்துகிறது.
இது போக, தமிழன் தமிழை உயர்த்திப்பிடிக்க மறுத்ததன் விளைவு சமஸ்கிருதம் இந்தியாவின் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று மோகன் பகவத் சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாய் எனவும், அது இந்தியா முழுவதும் மக்கள் தொடர்பு மொழியாக வர வேண்டும் என்று கூறி இருக்கிறார். தமிழன் தமிழை நினைக்காமல் ஜாதிய தீண்டாமையில் மழுங்கி போய் உள்ளானோ என அச்சம் எழுகிறது!
இந்தியாவின் மூத்த மொழி தமிழே என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர், அப்போ இந்தியாவின் தொடர்பு மொழியாக தமிழ் தானே வளரவேண்டும்..?
தமிழர்கள் அந்நிய திணிப்பான ஜாதியை பிடிவாதமாக பிடித்துக்கொண்டு வெற்று மாயையில் உருண்டு வாழ்வது ஏன் என புரியவில்லை…!

சோழர்களின் ஆட்சி காலம் வரை ஜாதிய தீண்டாமை தமிழகத்தை சூழவில்லை என வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் ஒரு நேர்காணலில் கூறுகிறார். மேலும் சோழர்களது ஆட்சியில் ஆரிய ஆதிக்கம் இல்லாமலே இருந்ததாக கூறுகிறார். அதன் பின்னர் வந்த மாற்று இன மன்னர்களால் [ஆரிய வர்ண்ன ஆக்கிரமிப்பால் வளர்ந்த மன்னர்] தான் தமிழகம் முழுவதும் ஜாதிய தீண்டாமை புகுந்தாகவும், சிறு குறு மன்னர்கள் ஆரிய துணைக்கொண்டு பெரு மன்னர்களாகி, வர்ணமுறைகளை திணித்ததாகவும் கூறுகிறார்.
பர்சியாவில் இருந்து பயணப்பட்டவர்கள் ஈரானிய மன்னில் இரு நூற்றாண்டு தங்க அங்குள்ள பெயர்களையும் வழிபாட்டு முறைகளையும் சற்று எடுத்துக்கொண்டு இந்தியா வந்தேறிய ஆரியர்கள் படிப்படியாக அரசாலும் அதிகார நிலையை அடைந்து தன்னை கடவுளுக்கும் மேல் என வர்ண நிலையை மாற்றி அதை தக்க வைக்க மற்றவர்களை படி நிலையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என திரித்து தீண்டாமையில் அடித்துக்கொள்ள செய்தால் நம் நிலை பறிபோகாது என வர்ண நிலையை பற்றி நேர்காணலில் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் தெறிவித்து உள்ளார்.
சோழர் பெருமை பேசும் தமிழர்கள் சோழ மன்னர்களை பின் பற்றாமல், சிறு, குறு அரசர்கள் பேராசை கொண்டு தன் மக்களுக்கே தீங்கிழைத்த ஆரிய சிந்தனைகளை பின்பற்றிய மன்னர்களின் தீண்டாமையை தொடர்வது நகைப்புக்குறியதே.
மேலும் ஒட்டுமொத்த தமிழர்கள் எப்படி சென்றால் என்ன, தனது தனிப்பட்ட போலி மாயையான ஜாதி பெருமை மட்டுமே முக்கியம் எனக் கருதுவது, தமிழின துரோகமாகாதா…?
பின்னர் தமிழருக்கு என்ன தகுதி உள்ளது மற்ற இனங்கள் தங்களை எப்படி ஆளலாம் என கேள்வி கேட்க?
தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்றால் எந்த தமிழன் என சண்டையிட்டு அழிந்துபோக வேண்டியது தான். [தமிழர்கள் எல்லம் தமிழன் என ஒரு குடைக்குள் வந்தால் மட்டுமே தமிழ் தேசியம் உருவாகும் இல்லையே அது காணல் நீர் தான்]
மேலும் இலங்கை தமிழர்களுக்கு எந்த அடிப்படையில் குரல் எழுப்பினார்கள் அது வெற்று கோசங்களா ?
ஜாதிய தீண்டாமை எனும் கிணற்றில் சிக்கிய தவளை போல தன்னை தானே ஏமாற்றி தன் குடும்பத்தையும் முன்னேறவிடாமல் செய்வது குடும்பத்துரோகம் இல்லையா? அறியாமையை அகற்ற முயலாவிட்டாலும் பரவாயில்லை, அகற்றும் வாய்ப்பை ஜாதிய உணர்வு எனும் திரை போட்டு அகற்றவே முடியாமல் செய்யும் செயல் துரோகம் தானே? இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை குடும்பத்தில் அனைவருமே உள்ளடங்கியவர்கள் தானே.

அந்த நாலு பேர்!
குடும்பத்தில் தாய், தந்தை கூறும் முக்கிய சொல் நாலு பேருக்கு என்ன சொல்லுறது, நாலு பேருகிட்ட எப்படி தலை காட்டுவது என்று தான், அவர்கள் கூறும் அந்த நாலு பேர நன்றாக கவணித்தால் அவர்கள் உருப்படியான வேலையில் இருக்க மாட்டார்கள், முறையான கல்வி அறிவு பெற்றிருக்க மாட்டார்கள், இல்லையேல் அடுத்தவர்கள் மாற்றம் அடைந்து முன்னேறுவதை விரும்ப மாட்டார்கள், அல்லது உங்களை அவர்கள் வளர்ச்சிக்கு, அவர்கள் வெற்று பெருமை பேச உங்களை அடக்கி வைக்க விரும்புபவர்களாக இருப்பார்கள்.
அந்த நாலுப்பேருக்காக குடும்பத்தினர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை என்னமோ தவறு செய்தவருக்கு மட்டும் தானே தவிர, உங்களுக்காக அந்த நாலு பேர் தண்டனையை பங்கு போட்டுக்கொள்ள வர மாட்டார்கள், இன்னும் சொல்லப் போனால் அதன் பிறகு உங்களை உங்கள் குடும்ப உருப்பினரை இன்னும் மோசமாகவே நடத்துவார்கள்.
தமிழனாக ஒன்றினைய மறுத்தால் தமிழினம் வீழ்ந்து தான் போகும் என்பது நிகழ்காலத்தில் நடப்பதையும், கடந்த கால வரலாற்றையும் உற்று நோக்கினால் புரியும்.
பாவலரேறுபெருஞ்சித்திரனார்- அவர்கள் உரையிலிருந்து..
அவன் தர்மமும், நம் அறமும்:
மக்களிடையே நான்கு வர்ணங்களாகப் பிரித்து, அங்கே ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் ஒவ்வொரு கடமையாகக் காட்டுவதைத்தான் அவன் தர்மம் என்று சொல்லுகிறான். ஜாதிகள் என்பவற்றைக்கூட பிறப்பின் அடிப்படையிலேயே சொல்லுகிறான். 'ஜாதி' என்கிற சொல் வட சொல். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், தமிழ்ச் சொல் என்று சாதி என்பது தமிழ்ச் சொல். அதற்குக் கூட்டம் என்று பெயர்; குழு என்று பெயர்; ஒரு மக்கள் தொகுதி என்று பெயர். ஜாதி என்று சொன்னால் பிறவியிலேயே வேறுபாடு உள்ள மக்கள் தொகுதி என்று பெயர். ஜாதி 'ஜனி' என்ற வேரடியாகப் பிறந்த சமசுக்கிருதச் சொல். நம்முடைய 'சாதி' என்ற தமிழ்ச் சொல் 'தொழில் பிரிவு', மக்கள் பிரிவுகளை அந்தந்த நிலவேறுபாடாக - தொழில் வேறுபாடாக - நான்கு நிலங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைச் சுட்டிச் சொல்வது - என்பதை உணர வேண்டும், அதற்கு ஒரே ஒரு சான்று - எடுத்துக்காட்டு தெளிவாக விளக்கம் தருகிற ஒர் உண்மை - என்னவென்று சொன்னால், இந்தச் சாதிப்பிரிவு என்று என்னென்ன இருக்கின்றனவோ, அந்தப் பெயர்ப் பட்டியல் அனைத்தையும் எடுத்துப் படித்துப் பார்த்தால், அனைத்துப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். நாடார், பிள்ளை, கவண்டர், முதலியார், படையாட்சி, இதுபோன்ற எந்தச்சொல் ஆனாலும் தென்பகுதியில் வழங்குகின்ற சாதிச் சொற்கள், வட பகுதியிலே மாறியிருக்கின்ற சொற்கள் ஆக இருக்கும்
இங்கே 'நாய்க்கர்’ என்று இருப்பது கேரளாவில் 'நாயர்' என்றிருக்கும். ஆந்திராவுக்குப் போனால் 'நாயுடு' என்றிருக்கும். இஃது எல்லாமே தலைமையைக் குறிக்கின்ற சொல்லாக இருக்கும். வடபகுதியில் சென்றால் 'நாய்க்' என்றிருக்கும். எல்லாமே தலைமைச் சொல்! எல்லாமே தமிழ்ச்சொல்! ஏன்? இது தொழில் பிரிவாகப் பிரிந்த இனம், மிக நீண்ட காலமாகவே தொழிலின் பிரிவுகளாலே பிரிந்திருந்த இந்த இனம், அரசியலிலே வளர்ந்திருந்த இந்த இனம், பண்பாட்டியலிலே வளர்ந்திருந்த இந்த இனம், கலைகளிலே வளர்ச்சி பெற்றிருந்த இந்த இனம், நாகரிகத்திலே வளர்ச்சி பெற்றிருந்த இந்த இனம், மொழியறிவுக் கூறுகளாகிய மொழியியலிலே வளர்ச்சி பெற்றிருந்த இந்த இனம், -எவ்வளவு பெரிய பேரினம்!

இன்றைக்கு நேற்றன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய உருசிய மொழி, தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய ஆங்கில மொழி, அதற்கு முன்பாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய சமஸ்கிருத மொழி, அதற்குமுன் ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கிரேக்க இலத்தீன் மொழிகள், முதலிய உலக மொழிகளுக்கு எல்லாம் மூலமான ஒரு மொழியாக நாம் பேசுகிற மொழியாகிய தமிழ்மொழி இருக்கின்றது என்று சொன்னால், இதை அடியோடு அவர்கள் மறுக்கின்றார்கள் - அழிக்கப் பார்க்கிறார்கள் . ஒழிக்கப் பார்க்கிறார்கள் - என்று சொன்னால், இதை ஏதோ நாம் அரசியல் புரட்சியாகவா செய்ய விரும்புகிறோம். ஏதோ ஒரு பொருளியல் புரட்சி செய்ய விரும்புகிறோமா? ஏதோ ஒரு பண்பாட்டியல் புரட்சியாகவா செய்ய விரும்புகிறோம்? இல்லை; கலைக் கூறுகளையா செய்ய விரும்புகிறோம்? இல்லை; இந்த இனம், அதனுடைய நாடி நரம்புகள் அதன் அடிப்படை வேர்கள். மூலங்கள். வித்துகள் அனைத்தும் ஆரியத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பதை நினைக்கும்போதுதான் - இவ்வளவு சிறப்பாக வளர்ந்திருந்த பெரிய வரலாற்று பெருஞ் சிறப்பான ஓர் இனம் எந்த எந்த வகையிலே அடிமைப்பட்டுவிட்டது என்று எண்ணி-வருந்த வேண்டியிருக்கிறது.
"வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார்:
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்.
நம்செயல், ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்;
நாம் உணர்ந்தோம் இந்நாள்; அவர் அஞ்சி
விழித்தார்"
என்று பாவேந்தர் அவர்கள் சொல்லுகிறார்கள் என்று சொன்னால், நாம் உணர்ந்து விட்டோம் என்று இன்று அஞ்சி விழித்துக் கொண்டிருக்கிறார்கள்

நம் பூசல்களாலும் வேறுபாடுகளாலுமே இனம் தாழ்வடைந்து விட்டது:
வாழ்வியல் என்பது நாம் கண்கூடாகப் பார்க்கின்ற செயல்களை உள்ளடக்கியது. எனவே, மதத்திற்காகவும், சாதிக்காகவும் நாம் பிளவு ஏற்படுத்திக் கொண்டு, நமது முயற்சிகளை முடப்படுத்திக் கொண்டு, உரிமை இழப்புகளுக்கு ஆளாகி விடக்கூடாது. அந்த உரிமை இழப்புகளால்தான் இத்தனையாயிரம் ஆண்டுகளாக நம் உடைமைகளை இழந்து, அழிந்து கொண்டிருக்கிறோம். உலகத்திலே இன்றைக்கு மாந்த இனங்கள், மக்கள் இனங்கள். தேசிய இனங்கள் என்று சொன்னால் இருக்கின்ற அத்தனை தேசிய இனங்களிலும், மக்கள் இனங்களிலும் மிகப்பழமையான இனம், மிகப்பெருமை வாய்ந்த இனம். மிகப்பெரிய நாகரிகத்தைப் பெற்றிருந்த இனம், மிகச் சிறந்த பண்பாட்டைப் பெற்றிருந்த இனம், மிகச் சிறந்த அறிவியல் கூறுகளைப் பெற்றிருந்த இனம், என்று தமிழினத்தைத் தவிர்த்த வேறு எந்த இனத்தையும் சுட்டிச் சொல்ல முடியாது, வரலாற்றிலே, நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. உலக வரலாறு படித்த அறிஞர்கள் தெரிந்திருப்பீர்கள். பின் ஏன் இந்த இனம் இழிவடைந்து விட்டது? என்ன காரணம்? நமக்குள்ளே இருக்கின்ற பூசல்கள், சாதி வேறுபாடுகள்
"ஆயிரம் உண்டிங்கு சாதி-எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி"
என்னயா இது வேடிக்கை! எப்படி சாதிகள் வந்தன? எப்படி வருண வேறுபாடாக மாறின? எப்படி இழிவு தாழ்வுகள் தோன்றின?
நாம் தமிழரல்லர் !
பள்ளென்போம்; பறையென்போம்;
நாட்டா ரென்போம்!
பழிதன்னை யெண்ணாமல் வண்ணா
ரென்போம்!
பிள்ளையென்போம்; முதலியென்போம்;
நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர், படையா
ளென்போம்! -
எள்ளல்செய் திழிக்கின்றோம். தாழ்விக்
கின்றோம்!
எண்ணுங்கள், நமைத் தமிழர்
என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது
தொலையு மட்டும்
கூசுங்கள்; நாணுங்கள்;
தமிழ்நாட் டாரே!
பெரும்பான்மையான தமிழனுக்கு தமிழ் இனம் பற்றியோ, தமிழ் மொழி பற்றியோ, தமிழ் நிலம் பற்றியோ, தமிழர் இயற்கை வளம் பற்றியோ சிந்தனை இல்லாமல், அந்நியன் புகுத்திய தீண்டாமை பற்றியே கவலை பட்டு, தன் இனத்தையே அழித்துக்கொண்டு இருக்கிறான் தமிழன்.
இனியாவது புகுத்திய தீண்டாமையை கைவிட்டு, தமிழை கையில் ஏந்துவோம் !
[ குறிப்பு: இக்கட்டுரையில் யாரையும் சிறுமைபடுத்தும் நோக்கம் அல்ல, தமிழர்கள் ஒன்றுபட உதவ வேண்டியே பதிவிடப்பட்டது] - மிளிர் ஊடகம்

