சமயபுரம் கோவில் வரலாறு:
கர்நாடகத்தை சேர்ந்த துவார சமுத்திரத்திலிருந்து அரசாண்டு வந்த ஓய்சாளர் அல்லது போசாளர் என்ற மரபினர் 13-ஆம் நூற்றாண்டில் கண்ணனூரைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வலிமை குன்றிய பிற்கால சோழ மன்னர்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவி செய்தனர். சோழ நாட்டு அரசாங்கத்தை மேம்படுத்தி உறுதியுடன் நிலைநாட்டுபவர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் என அழைத்துக்கொண்டனர்.
போசாள மன்னன், வீரசோமேசுவரன் இந்நகரை அமைத்து இதற்கு விக்கிரமபுரம் என்று அழைத்ததை பெங்களூர் அருங்காட்சியகச் செப்பேடுகள் கூறுகின்றன. தற்பொழுது கண்ணனூரில் உள்ள போஜேசுவரம் என்று அழைக்கப்படும் சிவன்திருக்கோயில் வீர சோமேசுவரனால் கட்டப்பட்டதாகும். போசாளீசுவரம் என இத்திருக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
வீர சோமேஸ்வரனுக்குப் பின்னர் அவன் மகன் வீர ராமநாதன் கண்ணனூரிலிருந்து அரசாட்சி செய்தான். வீர ராமநாதனின் அரசாட்சி கண்ணனூர் வரலாற்றில் பொற்காலமாகத் திகழ்ந்தது. பின்னர் பாண்டியர்கள் கண்ணனூரை கைப்பற்றினர். கண்ணனூரில் முகமதியர் காலத்தில் ஒரு போர் நடந்திருக்கிறது. இப்போர் பற்றி வரலாற்று ஆசிரியர் ‘இபன்படூடா’ வெகு விரிவாகக் கூறுகிறார்.
போசாள மன்னர்களில் கடைசி மன்னரான வீரவல்லாளன் மதுரையை ஆண்ட கியாசுதீன் துக்ளக்குடன் நடந்த போரில் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கண்ணனூர் முகமதியர் வசம் வந்தது. பிறகு விஜய நகர பேரரசின் பிரதானியான கம்பண்ண உடையார் காலத்தில் அவ்வரசின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது.
பிறகு 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப்போரில் கண்ணனூர் முக்கிய இடம் வகித்தது. ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் நிகழ்ந்த போரில் இராபர்ட் கிளைவ் பிரெஞ்சுப் படைகளை இவ்விடத்தில் முறியடித்து ஆங்கில அரசின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். எனவே கண்ணனூர் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகத் திகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது. அன்னை அருளாட்சி செய்யும் மாரியம்மன் கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. எனவே, இத்திருக்கோயில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்று இல்லாமல் போய்விட்டது.
எனினும், மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டி என்று வழங்கப்படும் ஊரில் உள்ள பாச்சில் அமலீசுவரம் சிவன்திருக்கோயில் கல்வெட்டில் - பனமங்கலம், துறையூர் போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. எனவே சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் திருக்கோயில் இருந்திருக்க வேண்டும். பின்னர் போசாள மன்னர் காலத்தில் மேலும் சிறப்பு அடைந்திருக்க வேண்டும்.
சமயபுரம் கோயிலில் கொடி கம்பத்தை அடுத்துள்ள மண்டபத்தின் தூண்களில் கீழ் பகுதியில் நாயக்க மன்னர்களின் உருவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே 700 ஆண்டுகளுக்கு மேல் இக்திருக்கோயில் அமைந்துள்ளதென அறியலாம். சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும், சக்தி தலமாகவும் இத்திருக்கோயில் விளங்கி வருகின்றது.
இபன் படூடா [வரலற்று ஆசிரியர்] சிறு குறீப்பு:
இபன் படூடா (Ibn Battuta) என்பது உலக வரலாற்றில் மிக முக்கியமான பயணியுமானவர். இவர் ஒரு மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய வரலாற்றாசிரியர், பயணி மற்றும் நீதிபதி ஆவார்
தனது பயண அனுபவங்களை "ரிஹ்லா" (அரபியில் “பயணம்”) என்ற நூலாக இப்னு ஜுஸாய் என்ற எழுத்தாளரிடம் கூறி எழுத வைத்தார். இந்த நூல் 14ஆம் நூற்றாண்டு இஸ்லாமிய உலகத்தின் சமூக, கலாச்சார, அரசியல் நிலைகளை விவரிக்கிறது. சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வரலாற்று பின்னணியில் முகமதியர் கால போரின் விவரங்களை இபன் படூடா விரிவாக எழுதியுள்ளார்.
இபன் படூடா முஸ்லிம் உலகத்தின் மார்கோ போலோ என அழைக்கப்படுகிறார், பயணத்தின் மகிழ்ச்சி மற்றும் புதிய கலாச்சாரங்களை அறிதல் என்பதையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டார். தரமான வரலாற்று ஆவணங்கள் மூலம் உலக வரலாற்றில் முக்கிய பங்களிப்பு செய்தார்.
இபன் படூடா தனது வாழ்க்கையில் சுமார் 75,000 மைல்கள் பயணித்துள்ளார் — இது மார்கோ போலோவின் பயணத்தைவிட அதிகம்!
மக்கா ஹஜ் பயணமாக 21 வயதில் தனது பயணத்தைத் தொடங்கினார், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, இந்தியா, சீனா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சுற்றிப் பார்த்தார். இந்தியாவில் தில்லி சுல்தானின் நீதிபதியாக பணியாற்றினார், மாலத்தீவுகள், சீனா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களிலும் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
பிறப்பு: பிப்ரவரி 24, 1304 – தாங்கியர், மொரோக்கோ.
இறப்பு: சுமார் 1368/1369, மொரோக்கோ. முழுப் பெயர்: அபூ அப்துல்லா முஹம்மது இப்னு அப்துல்லா அல-லவாதி அல்-தஞ்ஜி இப்னு படூடா.
கோவில் பெருமை:
கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள்.
மாரியம்மன் - கம்சன் [Piture: copilot]
அத்தேவியே மகா மாரியம்மன் என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள். மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தெய்வமாக சமயபுரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். மாரியம்மன் உற்சவர் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்று வந்ததென்றும் அந்த ஆட்சிக்குத் தளர்ச்சி நேர்ந்த போது - இந்தச் சிலையை தந்தப்பல்லக்கில் கொண்டுவரப்பெற்றபோது, பல்லக்கைத் தூக்கி வந்தவர்கள் அம்மன் திருமேனியை சமயபுரத்தில் கீழே இறக்கி வைத்து உணவு உட்கொள்ள சென்றார்கள் எனவும் பின்னர் வந்து தூக்க முயலும் போது பல்லக்கை தூக்க இயலவில்லை எனவும் பிறகு விஜயரங்க சொக்கநாதர் கண்ணனூரில் தனித் திருக்கோயில் அமைத்து அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்தார் எனவும் செவிவழிச் செய்தி கூறுகிறது.
இதைக் குறித்தே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம் என்ற முதுமொழியும் வழக்கில் உள்ளது.
படம்: சமயபுரம் கோவில் திருச்சி, தமிழ்நாடு.